July 9, 2010

பெண்கள் உரிமைகளையும் சிறுவர் உரிமைகளையும் மீறும் செயலாக புரட்டொப் தோட்ட சம்பவம் அணுகப்படவேண்டும்.

கடந்த வார வீரகேசரி குறிஞ்சிப்பரல்கள் பகுதியில் புஸ்ஸல்லாவ பகுதியிலுள்ள புரட்டொப் தோட்டத்தில் கர்ப்பிணித் தாய் ஒருவர் லொறியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகையில் லொறியிலேயே குழந்தை பிரசவிக்கப்பட்டு சிசு மரணமான விவகாரம் தொடர்பான இரு கட்டுரைகள் வெளிவந்திருந்தன. முறையான வைத்திய சேவை இல்லாமைää சீரான போக்குவரத்து வசதி இல்லாமை ஆகிய இரு விடயங்கள் குறித்து அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

வைத்திய தேவைக்காக லொறிகளை பயன்படுத்தும் பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது.

இது விடயத்தில் நாம் முதலாவது கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம் என்னவென்றால் லொறியில் எடுத்துச் செல்லப்பட்ட தாய்க்கு லொறியில் பிரசவமேற்பட்டு சிசு மரணமான சம்பவம் நிகழ்ந்திருக்காவிட்டால் இந்த நவீனகாலத்தில் கூட பெருந்தோட்ட பெண்கள் அதுவும் கர்ப்பிணிப்பெண்கள் ஆடுமாடுகளை போல லொறிகளில் எடுத்து செல்லும் சம்பவங்கள் நடக்கின்றன என்ற விடயம் வெளியில் தெரியாமலே தொடர்ந்து நடந்திருக்கும். ஆசிய பிராந்தியத்தில் சுகாதாரத்துறையை பொறுத்த மட்டில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதாக பெயர் எடுத்திருக்கும் எமது நாட்டில் பெருந்தோட்ட சுகாதாரத்;துறை இவ்வாறான நிலையில் இருப்பதையும் பெண் நோயாளிகள் அதுவும் கர்ப்பிணிப்பெண்கள் லொறிகளில் எடுத்து செல்லப்படும் அவலம் வெளியில் தெரியாமலே நடந்து கொண்டிருக்கும் போது நாம் இது தொடர்பாக எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கிறோம் என்பது முழு மலையகமும் மலையக தலைவர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாகும்.
மலையக சுசாதாரத்துறை இன்னும் முழுமையாக தேசிய சுகாதாரத்துறைக்கு உள்ளெக்கப்படாமல் இருப்பதன் ஒரு விளைவே இது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

பெண்கள் உரிமைகளை மீறும்செயல்

ஆயினும் இன்றைய நிலையில் இது விடயத்தை நாம் வேறு கோணத்தில் இருந்து பார்த்தல் வேண்டும். நமது அரசு பெண்களினதும் சிறுவர்களினதும் உரிமைகளை பாதுகாக்கவென பெண்கள் சிறுவர் வலுப்படுத்தல் அமைச்சு என்னும் பெயரில் தனியான அமைச்சு ஒன்றையே உருவாக்கியிருக்கிறது. எமது நாட்டில் பெண்கள் பட்டயம் ஒன்று உள்ளது. இதைவிட சீடோ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெண்களுக்கெதிரான அனைத்து பாரபட்சங்களையும் நீக்குவது தொடர்பான அனைத்துலக பொருந்தணை (Convention on elimination of all forms of discrimination against women) எனப்படும் சர்வதேச உடன்படிக்கை ஒன்றையும் நமது அரசு கையொப்பமிட்டுள்ளது. இந்த சீடோ பொருந்தணையின் பதின்நான்காவது சரத்து கிராமிய பெண்கள் (பெருந்தோட்ட பெண்களையும் உள்ளடக்குகிறது) சமமாக நடத்தப்படவும் சுகாதாரம்ää சுகநல சேவைகளை அனுபவிக்கவும் உரிமை உடையவர்களாவர் என்பதை தெட்டத்தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த பின்னணியில் பெருந்தோட்ட பெண்களின் வைத்திய தேவைகளுக்காக லொறிகளை பயன்படுத்துவது அவர்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலும் பெண்களின் மாண்பினை துச்சமாக மதிக்கும் செயலுமாகும். இந்த அடிப்படையில் வைத்திய தேவைகளுக்காக லொறிகளை பயன்படுத்தும் அநாகரீகமானதும் காட்டுமிராண்டித் தனமானதுமான செயல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இத்தேவைகளுக்காக அம்புலன்சுகள் மட்டுமே எதிர்காலத்தில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய மலையக அரசியல் தலைவர்கள் தொழிற்சங்கவாதிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் இவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பொறுப்பை மலையக சிவில் சமூக இயக்கங்களும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் ஏற்க வேண்டும்.

சிறுவர் உரிமைகளும் மீறப்பட்டுள்ளன.

அடுத்தாக இது விடயத்தில் நாம் கவனத்திலெடுக்க வேண்டிய இன்னொரு விடயம் உண்டு. அரசு அனைத்துல சிறுவர் சமவாயத்தில கையொப்பமிட்டிருப்பதுடன் சிறுவர் உரிமைகளை பாதுகாக்க பல அமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி சம்பவத்தில் போதிய சுகாதார வசதி கிடைக்காததால் சிசு மரணமடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி காரணமாக சிறுவரின் மிக முக்கிய உரிமைகள் இரண்டு மீறப்பட்டுள்ளன. சிறுவர் சமவாயத்தில் 6ம் உரிப்புரிமை “பிள்ளைகள் உயிர் வாழும் உரிமையுடையவர்கள் என்பதை ஒவ்வொருவரும் அங்கீகரித்தல் வேண்டும். பிள்ளைகளின் உய்வையும் வளர்ச்சியையும் அரசாங்கம் உறுதி செய்தல் வேண்டும்” எனக் கூறுவதுடன்; சமவாயத்தில் 24ம் சரத்து “பிள்ளைகள் கூடுமானளவு உயரிய சுகாதார வசதிகளைப் பெறும் உரிமையுடையவர்களாவர். சுகாதார மற்றும் வைத்திய சேவைகளைப் பெறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தல் வேண்டும். விசேடமாக சிசு மரணம் நோய் போசாக்கின்மை ஆகியவற்றைக் குறைக்கும் வகையிலான ஆரம்ப மற்றும் தடுப்பு ரீதியான சுகாதார பராமரிப்பு. பொதுச் சுகாதாரக்கல்விää அவை தொடர்ப்பான செயற்திட்டங்கள் ஆகியவற்றை பெறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தல் வேண்டும்” எனவும் கூறுகிறது. இந்த சம்பவத்தில் இந்த முக்கியமான இரண்டு சிறுவர் உரிமைகளும் மீறப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். ஆகவே இது சிறுவர்களின் உரிமைகளை துச்சமாக மதித்து அவர்கள் உரிமைகளை மீறும் ஒரு பாரதூரமான சம்பவமாகும். மொத்தத்தில் இந்த சம்பவம் பெண்கள் உரிமைகளையும் சிறுவர் உரிமைகளையும் மீறும் சம்பவங்கள் என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.

உரிமைகளை மீறுபவர்கள் அவற்றை வழங்கவேண்டிய நிலையை உருவாக்க வேண்டும்.

உரிமையை மீறியவர்கள் இந்த தோட்டத்தை நிர்வகிக்கும் கம்பனியும் தோட்ட நிர்வாகமும் ஆகும். எனவே தோட்ட வைத்தியரை இடமாற்றுவதால் இந்த பிரச்சினைக்கு எதுவித தீர்வும் கிடைக்காது. மக்கள் இதனை ஒரு உரிமை மீறல் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அதற்காக தீர்வை அடைய முயலவேண்டும். இது புரட்டொப் தோட்டமக்களின் பிரச்சினை மட்டுமல்ல எங்கெங்கெல்லாம் வைத்திய தேவைகளுக்காக லொறிகள் பயன்படுத்தப்படுகின்றனவோ எங்கெல்லாம் மக்களுக்கு உரிய சுகாதார வசதிகள் கிடைக்கவில்லையோ அத்தனை மக்களினதும் பிரச்சினையாகும். வைத்திய தேவைகளுக்காக லொறிகள் பயன்படுத்தும் அநாகரீகமான உரிமைமீறல் சம்பவங்களுக்கு எதிர்காலத்தில் முற்றிப்புள்ளி வைக்கப்பட வேண்டும். வைத்திய தேவைகளுக்காக இனி லொறிகளை பயன்படுத்துவதில்லை என்பதை ஒரு கொள்கையாக பிரகடனப்படுத்துமாறு தோட்ட கம்பனிகள் கோரப்பட வேண்டும். ஒவ்வொரு தோட்டத்திற்கும் ஒரு அம்புலன்ஸ் வண்டி இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அத்தோடு தோட்ட சுகாதாரத்துறை தேசிய சுகாதாரத்துறையில் முற்றாக உள்ளெடுக்கப்படாமல் இருப்பதே இந்த பிரச்சினைக்கெல்லாம் மூலகாரணம் என்பதை நமது அரசியல்வாதிகளும் தலைவர்களும் உணர்ந்து தோட்ட சுகாதாரத்துறையை முழுமையாக தேசிய சுகதாரத்துறையில் இணைக்கும் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதியாக இவ்வாறான விடயங்களை வெறும் சம்பவங்களாக எடுத்துக்கொண்டு குரல் எழுப்புவதை விடுத்து நமக்கு சட்டரீதியாகவோ அல்லது சர்வதேச பொருந்தணைகள் ரீதியாகவோ வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மீறப்படும் போது அவற்றை நாம் உரிமை மீறல் சம்பவங்களாக எடுத்துக்கொண்டு அந்த அடிப்படையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அவற்றை வென்றெடுக்க மக்களுக்கு அறிவ10ட்டுவதே இன்றைய தேவையாகும்.

MyFreeCopyright.com Registered & Protected

No comments:

Post a Comment