July 9, 2010

சிறுவர்கள் உயிர்வாழும் உரிமையை மதிக்கத்தவறிய செயலை பிரிடோ நுவரெலியா மாவட்ட சிறுவர் ஒன்றியம் கடுமையாக கண்டிக்கின்றது.

புஸ்ஸல்லாவை பகுதியில் புரொட்டொப் தோட்டத்தில் கர்ப்பிணித்தாய் ஒருவர் லொறியில் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படும் போது குழந்தையை பிரசவித்ததால் சிசு மரணமான சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்கள். நோயாளிகளை அதிலும் கர்ப்பிணித்தாய் ஒருவரை சாதாரண மனிதர்களே போக்குவரத்து செய்வதற்கு பயன்படுத்த கூடாத லொறியில் வைத்தியசாலைக்கு எடுத்துசென்றதன் மூலம் எமது தாய்மார்களுக்கான பெண்கள் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. தாய்மார்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதைவிட சிறுவர்கள் என்ற முறையில் நாம் முக்கியமாக சுட்டிக்காட்டும் விடயம் என்னவென்றால் சிறுவர் உரிமை சமவாயத்தின் 6வது உறுப்புரிமையின்படி “சிறுவர்களுக்கு உயிர்வாழும் உரிமை உண்டு” இந்த உரிமையை சிறுவர்களால் பாதுகாத்துக்கொள்ள முடியாததால் அந்த உரிமையை பாதுகாப்பது வளர்ந்தோர் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்புமாகும். இந்த கடமையையும் பொறுப்பையும் மீறுவது சிறுவரின் உரிமையை அப்பட்டமாக மீறும் செயலாகும். அதுமாத்திரமல்லாமல் இந்த கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவதில் இருந்து பொறுப்புவாய்ந்தவர்கள் தவறும்போது அது மறைமுகமாக சிறுவரின் உயிர்வாழும் உரிமையை மீறி அவர்கள் உயிரிழப்பதற்கு காரணமாகின்றது. எனவே இது ஒருவகையில் மறைமுகமான சிசுக்கொலை என்றே நாங்கள் கருதுகின்றோம்.

எமது அரசாங்கம் சிறுவரின் உயிர்வாழும் உரிமையை பாதுகாப்பதற்கும் அவர்களின் மற்ற உரிமைகளை பாதுகாப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசாங்கம் இவ்வாறு செயற்படும்போது பொறுப்புவாய்ந்தவர்கள் தமது கடமைகளில் இருந்து தவறுவதை நாம் அனுமதிக்க கூடாது. சிறுவர்களின் உரிமைகளுக்காக வளர்ந்தவர்கள் குரல்கொடுக்காத போது அதற்காக குரல்கொடுக்கும் உரிமையும் பொறுப்பும் சிறுவர்களாகிய எமக்கு உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் ஊடகங்களில் வெளிவரும் போது சிறுவர் உரிமைகளை பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொள்ளும் எமது நாட்டின் நற்பெயருக்கு அது களங்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே இவ்வாறான அல்லது வேறுவகையான சிறுவர் உரிமை மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அல்லது அமைப்புக்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

இந்த பின்னணியில் சிறுவரின் உரிமைகளை மதிக்காத இச்செயற்பாடு குறித்து பிரிடோ சிறுவர் ஒன்றியம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. எதிர்காலத்தில் நோயாளிகளை அதிலும் விசேடமாக கர்ப்பிணித்தாய்மார்களை போக்குவரத்து செய்வதற்கு அம்புலன்ஸ் வண்டிகள் அல்லது பொருத்தமான வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் எந்த காரணம் கொண்டும் லொறிகளை பயன்படுத்த கூடாது எனவும் எமது ஒன்றியம் வலியுறுத்த விரும்புகின்றது. இந்த விடயத்தை எங்கள் மலையக அரசியல் தொழிற்சங்க தலைவர்கள் ஒரு பாரதூரமான சிறுவர் உரிமை மீறல் விவகாரமாக கருதி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அத்தோடு மலையகத்தின் அரசசார்பற்ற அமைப்புக்கள் உட்பட மற்றைய பொது அமைப்புக்கள் இது விடயத்தில் குரல் எழுப்பி தமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இந்த விடயத்தை பெண்கள் சிறுவர் வலுவூட்டல் அமைச்சின் கௌரவ அமைச்சர் அவர்களினது கவனத்திற்கு கொண்டுவர நாம் முடிவு செய்துள்ளோம்.

புரொட்டொப்ட் தோட்டத்தில் நடைபெற்ற சிசு மரணம் தொடர்பாக பிரிடோ நிறுவன நுவரெலியா மாவட்ட சிறுவர் ஒன்றிய தலைவர் செல்வன். கணேசன் சரத்பாபுää பொகவந்தலாவை பிராந்திய சிறுவர் ஒன்றிய தலைவி செல்வி. விக்டோரியா ஆகியோர் கூட்டாக பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

MyFreeCopyright.com Registered & Protected

No comments:

Post a Comment